Donnerstag, 14. August 2014

அப்பாவின் துப்பாக்கி

பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் எல்லையை நோக்கி செல்ல வேண்டும் என்று எங்களிற்கு உத்தரவு வந்தது.நாங்கள் சரியாக சிந்திக்கும் சக்தியை இழந்திருந்தோம். 

ஏசு, புத்தர், முகமது, காந்தி, ஆப்ரகாம் லிங்கன் என எல்லோரிடமும் எங்கள் மக்களை காப்பாற்ற வரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களை முற்றிலுமாக கைகளுவி விட்டார்கள். விரக்தியில் பல போராளிகள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்தேன். 
சிலர் மலைகளில் பதுங்கிக்கொண்டு போராடிப்பார்க்க விரும்பினார்கள். 

வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒரு லாரியில் நெருக்கிக்கொண்டு எல்லையை நோக்கி பயணம் செய்தோம். வெளியேற வேறு பாதையே இல்லை. எங்களை சுற்றி படைவீரர்கள் நின்றுகொண்டார்கள். நாங்கள் நீர்மூலமாகிவிட்டோம். இது எங்களிற்கு ஜக்கிய நாடுகள் சமை வழங்கிய பரிசாகும். 

எங்களை இப்பொழுது நிறைய கூடாரங்கள் இருந்த ஒரு முகாமிற்கு கொண்டு சென்றார்கள். நாங்கள் அகதிகளாகிவிட்டோம். 

ஆண்களும் பெண்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். எங்கள் உடைகளை களையச் சொன்னார்கள். மிரட்டலுக்கு பணிவதை தவிர வேறு வழியிருக்கவில்லை. தலைமேல் கைவைத்த படி என் அப்பாவிற்கு அருகில் நான் அம்மணமாக நின்றேன். அம்மா, அக்கா, அண்ணிகள் அனுபவித்திருக்கக்கூடிய நிலமையை எண்ணிப்பார்த்தேன். இங்கே வந்ததைவிட இறந்திருந்தால் கௌரவமாக இருந்திருக்கும். 

தனிநாடு உதயமாகும் என்ற எங்களின் கனவையும் ஏளனம் செய்தார்கள். எங்களை வென்றுவிட்ட தோரணையில் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

"கதை முடிந்துவிட்டது. நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்" என்றார் அப்பா. 

வேறு ஒரு முகாமிற்கு எங்களை கொண்டு சென்றார்கள். இந்த முறை பெரிய கிடங்குகளில் தங்க வைக்கப்பட்டோம். அவற்றின் நடுவில் பொதுப்பாதை வைத்து ஒவ்வொரு குடும்பத்திற்குமென தனித்தனியாகச் சிறு அறைகளாகத் தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தார்கள். காலம் நகர மறுத்தது. பொழுதை கழிக்க எந்த வழியும் இல்லை. நாய்கள் போல் திரும்ப திரும்ப கூடாரத்தை சுற்றி வருவோம். 

ஏன் நாங்களும் ஏதாவது ஒரு நாட்டுக்குத் தப்பிச்செல்லக்கூடாது? நாம் எம் சொந்த மண்ணில் இறப்பது தான் எமக்கு பெருமை. வழியில் எங்களை போலவே பல குடும்பங்கள். எல்லையில் ஒரு பெரிய பதாகை எங்களை வரவேற்றது "தாயக மண்ணுக்கு வருக வருக". 

//இது ஈழத்தில் நடந்ததென்று நீங்கள் நினைத்திருந்தால் தவறில்லை. அங்கும் இப்பொழுது இப்படியானவை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

எமக்கு நடந்தது போலவே 70களில் இன்னொரு இனத்திற்கும் நடைபெற்றுள்ளது.
இது குர்திஸ்தான் விடுதலைப்போராட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்//

Keine Kommentare:

Kommentar veröffentlichen