Montag, 29. September 2014

ஊழிக்காலம்: முள்ளிவாய்க்கால் நாட்குறிப்பு

ஊழிக்காலம் பெயரே சற்று வித்தியாசமாக உள்ளது. இதுவரை கேள்விப்படாத சொல். தேடிப்பார்த்ததில் உயிரினங்களின் உருவாக்கத்திற்கும் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலமே ஊழிக்காலம் என்றழைக்கப்படுகின்றது என தெரியவந்தது. தமிழனத்தின் அழிவும் அதற்கு பின்னரான வாழ்வும் எப்படி இருக்கப்போகின்றது என்பதையும் இந்நூல் சொல்லி நிற்கின்றது.

இது ஊழிக்காலம் நூல் பற்றியது மட்டுமே, தமிழ்க்கவி அவர்களின் ஏனைய பேட்டிகள், நேர்காணல்கள் என வேறெந்த விடயத்திற்குள்ளும் போகவில்லை.
ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விடுகின்றேன். இந்நூலை வாசிக்க வேண்டாம் என்று அறிவுரைகளும் ஆலோசனைகளும் இலவசமாகவே தரப்பட்டன. இணையத்தளங்களிலிலும் அப்படியான கருத்துக்களே மேலோங்கி காணப்பட்டது. இதுவே இந்நூலை நான் வாசிப்பதற்கு உந்துசக்தியாகவும் அமைந்தது.
தமிழ்க்கவி அவர்களை நான் சிறுவனாக இருந்த போதே தமிழ் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். அதன் பின்னர் அவரை பற்றி கேள்விப்படுவது இந்நூலின் மூலமே. ஏற்கனவே “ஈழம்- சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” மற்றும் “கூண்டு” ஆகிய புத்தகங்களை வாசித்துள்ளதால் இதில் புதிதாக என்ன இருக்கப்போகின்றது என்ற மனநிலையிலயே வாசிக்க ஆரம்பித்தேன்.
இராணுவத்தினரின் பிடியிலிருக்கும் பார்வதியின் நினைவுகள் பின்னோக்கி செல்ல கண்களின் திரையில் கதை விரிகின்றது.
ஆரம்பம் முதலே பார்வதியின் இடப்பெயர்வை பக்கத்திலிருந்தே பார்ப்பது போல் கொண்டு சொல்லும் எழுத்து நடை அழகு. இறுதிவரை தினேஸின் நிலை என்னவாகும் என்றே தோன்ற வைக்கின்றது. தினேஸ் ஒவ்வொரு முறையும் இடப்பெயர்விற்கு தயார்படுத்தும் போது சர்வசாதரணமாக குண்டுகளிற்கு மத்தியில் சென்று பொருட்களை எடுத்துவரும் தினேஸ் திரும்புவாரா மாட்டாரா.. அப்படியே அவர் திருமபாவிட்டால் பார்வதியும் அவரை நம்பியுள்ளவர்களும் என்னாவார்கள் என்று மனம் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை யூகிக்க முடியாமல் தொடர்ந்து வாசிக்க வைக்கின்றது.
வந்துபோகின்ற ஒவ்வொரு மனிதர்களாகவும் ஓரு நிமிடம் வாழ்ந்துவிட்டுதான் மனது தொடர்ந்து செல்கின்றது. குண்டுகளை பல்லால் கடித்து துப்பியும், கண்களால் செயலிழக்கச் செய்தும் வீரம் காட்டும் சினிமா ஹீரோக்களை விட இங்கே வந்துபோகும் ஒவ்வொரு குடும்பத்தலைவர்களும் குண்டுகளை நேருக்நேர் சந்தித்து பயணிக்கும் கதாநாயகர்கள் ஆகின்றனர்.
ஊழிக்காலத்தில் இடம்பெற்ற ஒரு நல்ல விடயம் தமிழ் சமூகத்திடமிருந்த ஏற்றத்தாழ்வுகளை குறைந்தபட்சம் போர்க்காலத்திலாவது இல்லாமல் ஆக்கியது. எதைக் கொண்டு வந்தோம் கொண்டு செல்வதற்கு.. இறுதியில் எல்லாமிழந்து நின்றதைத்தான் காணமுடிந்தது. பணம் வேண்டாம் உணவுப்பொருட்கள் தாருங்கள் என்று நவீன உலகில் கேட்கப்படுகிறது அங்கே..
குண்டுகள் மட்டுமே அவர்களை வேட்டையாடவில்லை. இயற்கையும் தன் பங்கிற்கு தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளது. பசி, நோய், வெயில், மழை போன்றவற்றுடன் இயல்பான உடற்பசியும் சேர்ந்து கொண்டது.
குண்டடிபட்டு கீழே விழுந்தவரிடம் பால் பக்கெற்றை திருடியதாகட்டும், சுயநலத்திற்காக அடிப்படைத்தேவைகளை துஷ்பிரயோகம் செய்த தளபதிகள், போராளிகள், சக மனிதர்களாகட்டும், “இப்படி மனிதாபிமானமே இல்லாமல்” நடந்து கொள்கிறார்களே என்று எண்ணத்தோன்றுகிறது. உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே இருக்கமுடியாது. இப்படியொரு நிலையில் நான் என்ன செய்திருப்பேன் என்று இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நொடி சிந்தித்துப்பார்த்தோமானால், எங்களில் பலரின் ஒழுக்கம் ஒருமுறை எம் முன் வந்து பல்லிளித்துவிட்டு போகும்.
இடையிடையே பார்வதி சந்திக்கும் சில மனிதர்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கருத்துக்களை சொல்லிவிட்டு போனாலும் அவை யதார்த்தமான உண்மைகளே. தமிழீழ விடுதலைப்போராட்டம் துரோகத்தால் வீழ்த்தப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை. துரோகம் என்பது தனியே சர்வதேசம் மட்டும் செய்ததில்லை. அங்கே களத்திலும் நடந்தேறியுள்ளது என்பதை இந்நூல் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. அங்கே காட்டிக்கொடுத்தவனும் போராளி, காப்பாற்றியவனும் போராளி.
விடுதலைப்புலிகளில் சிலர் துரோகியாகியிருக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகளின் ஆன்மாவின் நேர்மையை தமிழ்க்கவி எங்கேனும் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றமே. எல்லாப் போராட்டங்களையும் போலவே அதிகாரத் துஷ்பிரயோகமும், துரோகமும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் விட்டுவைக்கவில்லை.
அங்கே காட்டிக்கொடுத்தவனும் இங்கே காசை அடித்தவனும் இன்றும் நம்முன்னே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதுவும் ஒரு நாள் கடந்துபோகும் என்று சொல்லி காலத்தை வீணடிப்பதைவிட, அவர்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் நிறுத்துவது இன்னொரு அவலத்தை தடுத்து நிறுத்தும்.
நாவல் முன் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு கட்டாய களப்பணிக்கு ஆட்களை பிடித்தது மற்றும் மக்களை கேடயங்களாக பயன்படுத்தியது. இது ஏற்கனவே கார்டன் வைஸ், பிரான்சிஸ் ஹரிசன் போன்றவர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டவை தான். ஆனால் அவர்கள் குற்றச்சாட்டை வைத்துவிட்டு அதற்கான பதிலையும் முடிந்தளவு தேடியிருந்தார்கள். மற்றும் புலிகளை அந்த நிலைக்கு தள்ளியவர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தார்கள். இந்நூலில் வெறுமனே எங்கோ தப்பு நடந்திருக்கின்றது என்று மட்டும் சொல்லிட்டு முடிந்துவிட்டது.
கட்டாயக் களப்பணிக்கு ஆட்களைப் பிடித்தல் மற்றும் மனிதகேடயங்களாக பாவித்தல் முதலானவற்றைக் காரணம் சொல்லி எப்படி புலிகள் இயக்கத்தை வெறுக்க முடியாதோ அதே போல் இந்த இரண்டு குற்றச்சாட்டிற்குமாக இந்த நூலையும் தள்ளிவைத்துவிட முடியாது.
இது போன்ற முள்ளிவாய்க்கால் நாட்குறிப்புக்கள் பல வெளிவரவேண்டும். இப்படியொரு அவலம் தமிழினத்திற்கு நடந்ததென்பதை கடந்த 5 ஆண்டுகளில் மறந்துவிட்ட சமூகத்திற்கு இப்படியான நூல்கள் நூற்றாண்டுகள் கடந்தும் எமது அழிவை நினைபடுத்தும் ஆவணமாக அமையும்.
http://www.eanil.com/?p=425

Donnerstag, 14. August 2014

அப்பாவின் துப்பாக்கி

பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் எல்லையை நோக்கி செல்ல வேண்டும் என்று எங்களிற்கு உத்தரவு வந்தது.நாங்கள் சரியாக சிந்திக்கும் சக்தியை இழந்திருந்தோம். 

ஏசு, புத்தர், முகமது, காந்தி, ஆப்ரகாம் லிங்கன் என எல்லோரிடமும் எங்கள் மக்களை காப்பாற்ற வரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களை முற்றிலுமாக கைகளுவி விட்டார்கள். விரக்தியில் பல போராளிகள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்தேன். 
சிலர் மலைகளில் பதுங்கிக்கொண்டு போராடிப்பார்க்க விரும்பினார்கள். 

வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒரு லாரியில் நெருக்கிக்கொண்டு எல்லையை நோக்கி பயணம் செய்தோம். வெளியேற வேறு பாதையே இல்லை. எங்களை சுற்றி படைவீரர்கள் நின்றுகொண்டார்கள். நாங்கள் நீர்மூலமாகிவிட்டோம். இது எங்களிற்கு ஜக்கிய நாடுகள் சமை வழங்கிய பரிசாகும். 

எங்களை இப்பொழுது நிறைய கூடாரங்கள் இருந்த ஒரு முகாமிற்கு கொண்டு சென்றார்கள். நாங்கள் அகதிகளாகிவிட்டோம். 

ஆண்களும் பெண்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். எங்கள் உடைகளை களையச் சொன்னார்கள். மிரட்டலுக்கு பணிவதை தவிர வேறு வழியிருக்கவில்லை. தலைமேல் கைவைத்த படி என் அப்பாவிற்கு அருகில் நான் அம்மணமாக நின்றேன். அம்மா, அக்கா, அண்ணிகள் அனுபவித்திருக்கக்கூடிய நிலமையை எண்ணிப்பார்த்தேன். இங்கே வந்ததைவிட இறந்திருந்தால் கௌரவமாக இருந்திருக்கும். 

தனிநாடு உதயமாகும் என்ற எங்களின் கனவையும் ஏளனம் செய்தார்கள். எங்களை வென்றுவிட்ட தோரணையில் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

"கதை முடிந்துவிட்டது. நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்" என்றார் அப்பா. 

வேறு ஒரு முகாமிற்கு எங்களை கொண்டு சென்றார்கள். இந்த முறை பெரிய கிடங்குகளில் தங்க வைக்கப்பட்டோம். அவற்றின் நடுவில் பொதுப்பாதை வைத்து ஒவ்வொரு குடும்பத்திற்குமென தனித்தனியாகச் சிறு அறைகளாகத் தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தார்கள். காலம் நகர மறுத்தது. பொழுதை கழிக்க எந்த வழியும் இல்லை. நாய்கள் போல் திரும்ப திரும்ப கூடாரத்தை சுற்றி வருவோம். 

ஏன் நாங்களும் ஏதாவது ஒரு நாட்டுக்குத் தப்பிச்செல்லக்கூடாது? நாம் எம் சொந்த மண்ணில் இறப்பது தான் எமக்கு பெருமை. வழியில் எங்களை போலவே பல குடும்பங்கள். எல்லையில் ஒரு பெரிய பதாகை எங்களை வரவேற்றது "தாயக மண்ணுக்கு வருக வருக". 

//இது ஈழத்தில் நடந்ததென்று நீங்கள் நினைத்திருந்தால் தவறில்லை. அங்கும் இப்பொழுது இப்படியானவை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

எமக்கு நடந்தது போலவே 70களில் இன்னொரு இனத்திற்கும் நடைபெற்றுள்ளது.
இது குர்திஸ்தான் விடுதலைப்போராட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்//

Donnerstag, 7. August 2014

என் உணர்வின் மொழி

உலகம் முழுவதும் இன்று பேசப்படுகின்ற 6'000 மொழிகளில் அரைவாசிக்கு மேல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது என்று சென்ற ஆண்டு தாய்மொழி தினத்தில் யுனேஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதில் 2'500 மொழிகளிற்கு மேல் வெறும் 10'000ற்கும் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். 

போர், இடப்பெயர்வு, வெளியேற்றப்படல் என்று பல தவிர்க்முடியாத காரணங்கள் இருந்தாலும் ஏனைய மொழிகளை, அழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது மொழிக்கலப்பு. மொழிகளின் அழிவில் முன்னிற்பது எந்த மொழியென்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை உள்ளூர் மொழிகளில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகின்றது.

அதிகாரத்தில் எந்த மொழி இருக்கின்றதோ அந்த மொழி ஏனைய மொழிகளை விழுங்க நினைத்தன் விளைவே உலக தாய்மொழி தினமாக 21. மாசி மாதம் பிறப்பெடுக்க காரணமாகவும் இருந்தது.

21. மாசி 1952 ஆம் ஆண்டு அன்றைய பாகிஸ்தான் தலைநகர் தக்காவில் ஊர்து மொழியை அரசமொழியாக்கும் தீர்மானத்திற்கெதிராக போராட்டம் வெடித்தது. அன்றை காலகட்டத்தில் வெறும் 3வீதம் பாகிஸ்தானியர்களால் பேசப்பட்ட மொழியே ஊர்து மொழி. துரதிஷ்ரவசமாக இந்த 3வீதத்தினரிடமே
பாகிஸ்தானின் அதிகாரம் இருந்தது. 56வீதமானவர்கள் பெங்காளி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தனர். ஒன்பது மாத உள்நாட்டு போரிற்கு பின்னர் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிறப்பெடுத்தது. பங்களாதேசின் தேசியமொழியாக பெங்காளி மொழி அறிவிக்கப்பட்டது.

சுருக்கமாக சொல்லப்போனால் அதிகாரத்தில் உள்ள மக்களின் மொழி, அதிகாரத்தில் இல்லாதவர்களின் மொழிகளை விழுங்க நினைக்கின்றது.

இந்தியாவில் மட்டும் 750ற்கு அதிகமான பிராந்தியமொழிகள் நடைமுறையில் உள்ளன. ஒரு மொழியின் அழிவில் அதன் பாரம்பரியம் பண்பாடு போன்ற அனைத்தும் அழிந்துபோகின்றது என்று யுனேஸ்கோ அமைப்பு சொல்கின்றது. எனவே தான் யுனேஸ்கோ அமைப்பு தாய்மொழியில் கட்டாயக் கல்வியை வற்புறுத்துகின்றது.

குழந்தை பிறந்தவுடன் தானாகவே ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் திறனை பெற்றுக்கொள்கின்றது. நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்த குழந்தையுடன் பேசினாலே நாம் பேசுவதை உள்வாங்கி அந்த குழந்தை தனது தாய்மொழியின் அடிப்படையை கற்றுகொள்கின்றது.
அதன் பின்னர் ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழி அறிவை மேலும் மெருகூட்டுகின்றது. ஆனால் ஆரம்பக்கல்வியே எமக்கு வேறொரு மொழியாக இருந்தால் கிட்டத்தட்ட நாம் தாய்மொழியற்றவர்களாகவே ஆகின்றோம்.எந்த மொழியிலும் முழுமையடையதவர்கள் ஆகின்றோம். எனவே தான் ஆரம்பக்கல்வியை தாய்மொழியில் தொடர்வது முக்கியமாகின்றது. தாய்மொழி கற்கும் போதே வேறொரு மொழியை கற்பதற்கான திறனை நாம் பெறுகின்றோம் என்கிறது அறிவியல்.
எனவே வேறொரு மொழியை கற்க முதல் தாய்மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாக அமைகின்றது. தாய்மொழியை முழுமையாக பயின்றவர்கள் இலகுவாக இன்னொரு மொழியை கற்றுக்கொள்வார்கள் என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை .

தாய்மொழியை முழுமையாக கற்க முதலே பாடசாலையில் வேறொரு மொழியை கற்பவர்கள் "அரைமொழி" (semilingualism) என்றழைக்கபடுகின்றார்கள். தாய்மொழியை விட வெறொரு மொழியை பெருமையாக கருதுவதாலேயே இந்நிலை உருவாகின்றது. என் மொழி என் அடையாளம் என்பதை பலர் உணர்ந்துகொள்வதில்லை. எத்தனை மொழிகளை கற்றறிந்தாலும் தாய்மொழியே உணர்வுகளின் மொழியாக இருக்கமுடியும்.

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை வெளிநாட்டு பிள்ளைகள் தங்களின் தாய்மொழியை கற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களிற்கு ஒரு சுயநலமும் உண்டு. தாய்மொழியில் சரளமாக யார் பேசுகின்றார்களோ அவர்களே இந்நாட்டு மொழியை விரைவாக கற்ககூடியவர்களாக உள்ளனர். சுவிஸ் நாட்டில் பேசப்படுகின்ற மொழிகளை வெளிநாட்டு பிள்ளைகளிற்கு இரண்டாவது மொழியாகவே அவர்கள் பார்க்கின்றனர். தாய்மொழியே அவர்களிற்கு முதல்மொழியாக கருதுகின்றனர்.

தங்கள் நாட்டு மொழியை வெளிநாட்டு பிள்ளைகளிற்கு முதல் மொழியாக பயிற்றுவிக்க அவர்கள் முற்படுவதில்லை. அது வெற்றியும் அழிப்பதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே தான் இங்கே பல நூலகங்களில் ஒன்பதற்கு மேற்பட்ட மொழிகளில் நூல்களை வைத்துள்ளனர் என பேர்ண் மாநிலத்தல் அமைந்துள்ள ஒரு நூலகத்தின் இயக்குனர் தெரிவிக்கின்றார். தற்பொழுது சுவிசில் 14 நூலகங்களில் வெளிநாட்டு பிள்ளைகளின் தாய்மொழி திறனை அதிகரிப்பதற்காக அவர்களின் தாய்மொழியில் நூல்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் யாரும் வேற்று மொழிகளிற்கு எதிரிகள் கிடையாது. மாறாக மொழிகளின் முக்கியத்துவம் அறிந்தவர்கள். ஆங்கிலம் மற்றும் பிரேஞ் மொழிகள் சிறுவயது முதலே இங்கே கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பரந்துபட்ட தேசங்களில் உள்ள நடைமுறைக்கும் ஜரோப்பிய நாடுகளில் உள்ள நடைமுறைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இங்கே அந்தந்த பிராந்தியங்களில் வாழுகின்ற மக்களின் மொழிகளே கல்விமொழியாகவும் பாடமொழியாகவும் உள்ளது. வேற்று மொழிகளிற்கேற்றாற்போல் பாடத்திட்டங்களையோ பாடங்களையோ மாற்றி அமைப்பதில்லை. சுவிஸ் போன்ற நான்கு மொழிகளை கொண்ட ஒரு சிறிய நாட்டில் அந்தந்த பிராந்தியங்களியிலயே கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றது. ஆங்கிலமோ பிரேஞ்சோ இங்கே ஒரு பாடம் மட்டுமே. இந்த மொழிகளும் ஒரு குறிப்பிட்ட வயதுவரையே கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கின்ற கல்வியை பொறுத்தே இந்த மொழிகளை நாம் கற்க வேண்டுமா இல்லையா என முடிவாகின்றது.
ஆகமொத்தம் தாய்மொழி தவிர்ந்த வேற்று மொழிகளின் அடிப்படை தெரிந்திருந்தால் போதும் என்பதே இதன் பொருள். அதன் பின்னர் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பினால் தொடர்ந்து இம் மொழிகளை படிக்கலாம்.

அதிக மக்களால் பேசப்படுகின்றது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மொழியை ஆட்சிமொழியாக்கலாம் என்றால், உலகிலயே அதிக மக்களால் பேசப்படுகின்ற சீன மொழியை உலக மொழியாக்க இரண்டாவது இடத்திலுள்ள ஆங்கியேர்களும் மூன்றாவது இடத்திலுள்ள "இந்தியர்களும்" சம்மதிப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

Dienstag, 5. August 2014

புகை போட்டு கொழுத்தவர்கள்



சென்ற மாதம் 5. மற்றும் 6. திகதிகளில் பாரிஸ் நகரில் பூட்டப்பட்ட கதவுகளிற்கு பின்னால் அனைத்துலக பொருளாதார வழக்கறிஞர்களின் சந்திப்பு நடைபெற்று முடிந்தது. 


இங்கே பேசப்பட்ட, எடுக்கப்பட்ட எந்த முடிவுகளும் வெளியுலகிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். பத்திரிகையாளர்களோ, ஊடகவியலாளர்களோ எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இப்படியொன்று நடந்து முடிந்ததே வெளியுலகத்திற்கு தெரிந்திருக்கு வாய்ப்பிலாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த சந்திப்பில் உலகம் முழுவதிலும் உள்ள 26 தலைசிறந்த பொருளாதார வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இங்கே முக்கியமாக பேசப்பட்ட விடயம் எதுவாக இருக்குமென்றால் ஒரு நாட்டிற்குள் அதன் அனுமதியில்லாமல் மூக்கை நுழைப்பது எப்படி என்பது பற்றி தான்.

பிலிப் மோறிஸ் (Philip Morris) சிகரெட் விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் ஒரு குழுமம். உலகம் முழுவதிலும் 87 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் நாட்டை தலமையமாக கொண்டு இயங்கிவருகின்றது.

இந்த பிலிப் மோறிஸ் குழுமம் உருகுவே (Uruguay) என்ற சிறிய நாட்டின் மீது ஒரு வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு பொதுவழக்காக இல்லாமல், அதாவது உருகுவே நாட்டு நீதிமன்றங்கள் இதில் தலையிடமுடியாது, தொடுக்கப்பட்டுள்ளது.இவர்களின் தலமையகம் அமைந்துள்ள சுவிஸ் நாடும் இதில் மூக்கை நுழைக்க முடியாது. ஏன் அமெரிக்காவே எதுவும் செய்ய முடியாது. அப்படி என்ன மாதிரியான வழக்கு அது?

இந்த வழக்கை பிலிப் மோறிஸ் குழுமம் அமெரிக்காவில் உள்ள உலகவங்கியின் அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள இதுவரை யாருமே கேள்விப்பட்டிராத அனைத்துலக முதலீடுகளிற்கான மோதல் தவிர்ப்பு மையத்திடம் (ICSID) தொடுத்துள்ளார்கள். இங்கே வாதாடப்டுகின்ற வழக்குகள் பூட்டப்பட்ட கதவுகளின் பின்னால் நடந்துமுடிந்துவிடும். எந்த தகவலும் வெளியில் கசிவதில்லை.

மார்ச் மாதம் 2006ஆம் ஆண்டு உருகுவே நாட்டு பிரதமர் ஓர் அறிவிப்பை வெளியிடுகின்றார். பொது இடங்களில் புகைபிடித்தல் தடைசெய்யப்படுகின்றது என்ற அறிவிப்பே அது. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 5 மில்லியன் மக்கள் இந்த புகைபிடித்தல் பழக்கத்தினால் இறக்கின்றனர். எனவே உருகுவே நாடு இந்த அடிமைப்பழக்கத்தை குறைப்பதற்காக முதல் அடியை எடுத்து வைத்தது.

2008 மற்றும் 2009 ஆண்டு மேலும் இரண்டு இறுக்கங்களை கொண்டு வந்தார்கள். சிகரெட் பெட்டிகளில் 80வீதம் சிகரெட் பிடிப்பதனால் வரும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்ச்சி படங்களே அச்சிட்டிருக்க வேண்டும் மற்றும் ஒரு சிகரெட் பிராண்டின் ஒரு வடிவம் மட்டுமே ஒரு கடையில் விற்க முடியும். அதாவது ஒரு பிராண்ட் சிகப்பு, கோல்ட் என்ற பல வகையான சிகரெட்டுக்களை ஒரே கடையில் விற்கமுடியாது.

இந்த இறுக்கத்தை தங்கள் மீது தொடுக்கப்பட்ட போராக புகையிலை குழுமங்கள் எடுத்துக்கொண்டன.

பிலிப் மோறிஸ் குழுமம் 2010ஆம் ஆண்டு ஒரு அறிக்கை வெளியிடுகின்றது. உருகுவே நாட்டின் சட்ட இறுக்கங்களால் 12 சிகரெட் வகைகளை உருகுவே நாட்டு சந்தையிலிருந்து வெளியேற்றுவதாக. இதனை தொடர்ந்து உருகுவே நாட்டின் மீது மேலே கூறியிருந்த ICSIDயில் வழக்கு போட்டார்கள். நஷ்ட ஈட்டு தொகை எவ்வளவு என்பது இதுவரை சம்மந்தப்பட்ட இருதரப்பினரை தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இந்த ஆண்டு மே மாதம் பைனான்சியல் ரைம்ஸ் பத்திரிகை 2 பில்லியன் நஷ்டஈட்டு தொகை என்று கணித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. பிலிப் மோறிஸ் குழுமம் உடனடியாக அதனை 25 மில்லியனாக மாற்றும்படி கட்டளையிட்டது. இதன் மூலம் நஷ்டஈட்டு தொகை 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று உறுதியாகிவிட்டது.

இந்த ICSID அமைப்பானது பல உலகநாடுகள் தங்களிற்குள் செய்துகொண்ட "வெளிநாட்டவர்களிற்கான முதலீட்டு பாதுகாப்பு" ஒப்பந்தகளினால் உருவானது.

முதலாவது ஒப்பந்தம் ஜேர்மன் நாட்டிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையில் 1959ஆம் ஆண்டு நடைபெற்றது.

ஜேர்மன் நாடு பாகிஸ்தானில் முதலிடுகின்ற தனது நிறுவனங்களை பாகிஸ்தானில் உள்ள ஊழல் நீதிமன்றங்களாலும் அரசியல்வாதிகளாலும் அரச உடமையாக்கமால் காப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமான அறிக்கை சொல்கின்றது.

இதன் ஆபத்தான மறுபக்கம் என்வென்றால், முதலீடு செய்த நாட்டில் அந்த நிறுவனம் முதலீடு செய்த நாட்டின் மீது வழக்கு தொடுக்கலாம். ஆனால் அந்த நாடு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கமுடியாது என்பதே.முதலீட்டாளர்கள் மீது எந்த வழக்கும் அந்த அரசாங்கங்களினால் பதிய முடியாது. ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள ICSIDயில் வழக்கு தொடுக்கலாம். இதில் எந்த நாட்டிற்கும் தலையிடும் உரிமை இல்லை.

ஒரு வழக்கு முடிவிற்கு வந்தவிட்டதென்றால் அதன் பின்னர் அதற்கு மேல் முறையீடு என்பது கிடையாது. ஒரே தீர்ப்பு அதுவே இறுதித்தீர்ப்பு.

இதுவரை 300 வழக்குகள் இந்த அமைப்பில் 1966ஆம் ஆண்டிலிருந்து பதியப்பட்டுள்ளன. 192 வழக்குகள் முடிவிற்குவந்துவிட்டன. இங்கே பதியப்பட்டுள்ள 80வீதமான வழக்குகள் 2003-2012 ஆண்டுகளிற்கிடைப்பட்டவை. அதிகமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டது ஏழை நாடுகள். வழக்கு பதிந்தவர்கள் செல்வந்த நாட்டு நிறுவனங்கள்.

உருகுவே நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி 50பில்லியன் அமெரிக்க டொலர்கள். பிலிப் மோறிஸ் குழுமத்தின் வருடாந்த உற்பத்தியின் தொகை 77பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த வழக்கின் முடிவு அடுத்த ஆண்டு எட்டப்படலாம்.