Dienstag, 5. August 2014

புகை போட்டு கொழுத்தவர்கள்



சென்ற மாதம் 5. மற்றும் 6. திகதிகளில் பாரிஸ் நகரில் பூட்டப்பட்ட கதவுகளிற்கு பின்னால் அனைத்துலக பொருளாதார வழக்கறிஞர்களின் சந்திப்பு நடைபெற்று முடிந்தது. 


இங்கே பேசப்பட்ட, எடுக்கப்பட்ட எந்த முடிவுகளும் வெளியுலகிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். பத்திரிகையாளர்களோ, ஊடகவியலாளர்களோ எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இப்படியொன்று நடந்து முடிந்ததே வெளியுலகத்திற்கு தெரிந்திருக்கு வாய்ப்பிலாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த சந்திப்பில் உலகம் முழுவதிலும் உள்ள 26 தலைசிறந்த பொருளாதார வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இங்கே முக்கியமாக பேசப்பட்ட விடயம் எதுவாக இருக்குமென்றால் ஒரு நாட்டிற்குள் அதன் அனுமதியில்லாமல் மூக்கை நுழைப்பது எப்படி என்பது பற்றி தான்.

பிலிப் மோறிஸ் (Philip Morris) சிகரெட் விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் ஒரு குழுமம். உலகம் முழுவதிலும் 87 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் நாட்டை தலமையமாக கொண்டு இயங்கிவருகின்றது.

இந்த பிலிப் மோறிஸ் குழுமம் உருகுவே (Uruguay) என்ற சிறிய நாட்டின் மீது ஒரு வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு பொதுவழக்காக இல்லாமல், அதாவது உருகுவே நாட்டு நீதிமன்றங்கள் இதில் தலையிடமுடியாது, தொடுக்கப்பட்டுள்ளது.இவர்களின் தலமையகம் அமைந்துள்ள சுவிஸ் நாடும் இதில் மூக்கை நுழைக்க முடியாது. ஏன் அமெரிக்காவே எதுவும் செய்ய முடியாது. அப்படி என்ன மாதிரியான வழக்கு அது?

இந்த வழக்கை பிலிப் மோறிஸ் குழுமம் அமெரிக்காவில் உள்ள உலகவங்கியின் அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள இதுவரை யாருமே கேள்விப்பட்டிராத அனைத்துலக முதலீடுகளிற்கான மோதல் தவிர்ப்பு மையத்திடம் (ICSID) தொடுத்துள்ளார்கள். இங்கே வாதாடப்டுகின்ற வழக்குகள் பூட்டப்பட்ட கதவுகளின் பின்னால் நடந்துமுடிந்துவிடும். எந்த தகவலும் வெளியில் கசிவதில்லை.

மார்ச் மாதம் 2006ஆம் ஆண்டு உருகுவே நாட்டு பிரதமர் ஓர் அறிவிப்பை வெளியிடுகின்றார். பொது இடங்களில் புகைபிடித்தல் தடைசெய்யப்படுகின்றது என்ற அறிவிப்பே அது. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 5 மில்லியன் மக்கள் இந்த புகைபிடித்தல் பழக்கத்தினால் இறக்கின்றனர். எனவே உருகுவே நாடு இந்த அடிமைப்பழக்கத்தை குறைப்பதற்காக முதல் அடியை எடுத்து வைத்தது.

2008 மற்றும் 2009 ஆண்டு மேலும் இரண்டு இறுக்கங்களை கொண்டு வந்தார்கள். சிகரெட் பெட்டிகளில் 80வீதம் சிகரெட் பிடிப்பதனால் வரும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்ச்சி படங்களே அச்சிட்டிருக்க வேண்டும் மற்றும் ஒரு சிகரெட் பிராண்டின் ஒரு வடிவம் மட்டுமே ஒரு கடையில் விற்க முடியும். அதாவது ஒரு பிராண்ட் சிகப்பு, கோல்ட் என்ற பல வகையான சிகரெட்டுக்களை ஒரே கடையில் விற்கமுடியாது.

இந்த இறுக்கத்தை தங்கள் மீது தொடுக்கப்பட்ட போராக புகையிலை குழுமங்கள் எடுத்துக்கொண்டன.

பிலிப் மோறிஸ் குழுமம் 2010ஆம் ஆண்டு ஒரு அறிக்கை வெளியிடுகின்றது. உருகுவே நாட்டின் சட்ட இறுக்கங்களால் 12 சிகரெட் வகைகளை உருகுவே நாட்டு சந்தையிலிருந்து வெளியேற்றுவதாக. இதனை தொடர்ந்து உருகுவே நாட்டின் மீது மேலே கூறியிருந்த ICSIDயில் வழக்கு போட்டார்கள். நஷ்ட ஈட்டு தொகை எவ்வளவு என்பது இதுவரை சம்மந்தப்பட்ட இருதரப்பினரை தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இந்த ஆண்டு மே மாதம் பைனான்சியல் ரைம்ஸ் பத்திரிகை 2 பில்லியன் நஷ்டஈட்டு தொகை என்று கணித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. பிலிப் மோறிஸ் குழுமம் உடனடியாக அதனை 25 மில்லியனாக மாற்றும்படி கட்டளையிட்டது. இதன் மூலம் நஷ்டஈட்டு தொகை 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று உறுதியாகிவிட்டது.

இந்த ICSID அமைப்பானது பல உலகநாடுகள் தங்களிற்குள் செய்துகொண்ட "வெளிநாட்டவர்களிற்கான முதலீட்டு பாதுகாப்பு" ஒப்பந்தகளினால் உருவானது.

முதலாவது ஒப்பந்தம் ஜேர்மன் நாட்டிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையில் 1959ஆம் ஆண்டு நடைபெற்றது.

ஜேர்மன் நாடு பாகிஸ்தானில் முதலிடுகின்ற தனது நிறுவனங்களை பாகிஸ்தானில் உள்ள ஊழல் நீதிமன்றங்களாலும் அரசியல்வாதிகளாலும் அரச உடமையாக்கமால் காப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமான அறிக்கை சொல்கின்றது.

இதன் ஆபத்தான மறுபக்கம் என்வென்றால், முதலீடு செய்த நாட்டில் அந்த நிறுவனம் முதலீடு செய்த நாட்டின் மீது வழக்கு தொடுக்கலாம். ஆனால் அந்த நாடு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கமுடியாது என்பதே.முதலீட்டாளர்கள் மீது எந்த வழக்கும் அந்த அரசாங்கங்களினால் பதிய முடியாது. ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள ICSIDயில் வழக்கு தொடுக்கலாம். இதில் எந்த நாட்டிற்கும் தலையிடும் உரிமை இல்லை.

ஒரு வழக்கு முடிவிற்கு வந்தவிட்டதென்றால் அதன் பின்னர் அதற்கு மேல் முறையீடு என்பது கிடையாது. ஒரே தீர்ப்பு அதுவே இறுதித்தீர்ப்பு.

இதுவரை 300 வழக்குகள் இந்த அமைப்பில் 1966ஆம் ஆண்டிலிருந்து பதியப்பட்டுள்ளன. 192 வழக்குகள் முடிவிற்குவந்துவிட்டன. இங்கே பதியப்பட்டுள்ள 80வீதமான வழக்குகள் 2003-2012 ஆண்டுகளிற்கிடைப்பட்டவை. அதிகமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டது ஏழை நாடுகள். வழக்கு பதிந்தவர்கள் செல்வந்த நாட்டு நிறுவனங்கள்.

உருகுவே நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி 50பில்லியன் அமெரிக்க டொலர்கள். பிலிப் மோறிஸ் குழுமத்தின் வருடாந்த உற்பத்தியின் தொகை 77பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த வழக்கின் முடிவு அடுத்த ஆண்டு எட்டப்படலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen